கோவில் நகைகளை உருக்குவதில் அரசு நேர்மையாக செயல்படும்
மதுரை-கோவில் நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிக்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். தீ விபத்திற்கு உள்ளான வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். பார்வை பாதித்து சிகிச்சை பெற்று வரும் யானை பார்வதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகம விதிகள் சிக்கல் உண்டா என ஆய்வு செய்து பக்தர்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்கப்படும்.
சோளிங்கர், அய்யர்மலை கோவில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த பல்வேறு ஆபரணங்கள் ஒன்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதில், தெய்வங்களுக்கு பயன்படுத்தக் கூடியவை தவிர, மற்ற ஆபரணங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதி, அந்தந்த கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கோவில்களை தமிழக அளவில் மூன்று மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகளை பிரித்து உருக்கும் பணி நடக்கும். நடவடிக்கைநகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் மூர்த்தி, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.