ஆதியோகி தரிசித்த ஆதரவற்ற முதியோர்கள்
ADDED :1520 days ago
தொண்டாமுத்தூர்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதியோகியை தரிசித்தனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, உலக சுற்றுலா தினத்தையொட்டி, கோவை மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஸ்கால் கிளப், அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும், சுமார், 60 பேரை ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து சென்றனர். சுற்றுலாவின் ஒரு பகுதியாக, கோவையின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்கும், ஈஷாவிற்கு சென்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், காலையில், சாரல் மழையுடன், இயற்கையின் அழகோடு, ஆதியோகியை தரிசித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து, தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் முதியோர்கள் தரிசித்தனர்.