சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
சின்னமனுார் : சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சின்னமனுார், மார்க்கையன்கோட்டை ரோட்டில் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் கோயில் உள்ளது. பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்தலமாகும். சரித்திர முக்கியத்துவம் கொண்ட இந்த கோயிலில் 2007ல் திருப்பணி, கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாகும். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 7 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணிகள் பாதி முடிந்த நிலையில் இதுவரை பணிகள் செய்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் திருப்பணி,கும்பாபிஷேகமும் நீண்டகாலமாக நடத்த வில்லை.இக் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.