தாயின் அன்பு மேலானது
ADDED :1507 days ago
ஒருமுறை நாயகத்தை காண, நண்பர் ஒருவர் வந்திருந்தார். தன்னிடமிருந்த போர்வையை நண்பர் விரித்துக் காட்டவே, அதில் புறா ஒன்று தனது இரு குஞ்சுகளுடன் இருந்தது. குஞ்சுகளை பாதுகாக்க புறா இறகுகளை விரித்து அணைத்துக் கொண்டது.
‘‘நாயகமே.. உங்களை காண வரும் வழியில், புதர் ஒன்றில் இதனை கண்டேன். அழகாக இருந்ததால் உங்களுக்கு கொடுக்க கொண்டு வந்தேன்’’ என்றார் நண்பர்.
இதைக் கேட்ட நாயகம் கண் கலங்கினார்.
‘‘எதற்கு இப்படி ஒரு காரியத்தை செய்தீர்கள். குஞ்சுகளுக்கு நேர்ந்த ஆபத்து தனக்கும் வரட்டும் என தாய்ப்புறா நினைத்ததால், அது வலிய வந்து உங்களிடம் சிக்கிக் கொண்டது. ஒரு தாயினுடைய அன்பு எவ்வளவு மேலானது என்பதை புரிந்து கொண்டீர்களா... புறாக்களை எடுத்த இடத்திலேயே அதை விட்டுவிடுங்கள்’’ என்றார்.