சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கோலாகலம்: வீடு, கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவை: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழகம் முழுவதும் சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை அழகேசன் ரோட்டிலுள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழங்கள் மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. புளியம்பட்டி ஸ்ரீகமலகா மாட்சியம்மன் கோவிலில், நவராத்திரி வழிபாட்டில், சரஸ்வதி, ஆயுத பூஜை சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது.சரஸ்வதி பூஜையான் இன்று வீடுகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து, சரஸ்வதிக்கு வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரித்து, ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.