மருதமலையில் குவிந்த பக்தர்கள் : இன்று அம்பு எய்யும் விழா
ADDED :1459 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த, 7ம் தேதி, உற்சவ மூர்த்திகள் கொலு வைக்கப்பட்டது. கொலுவில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு, நாள் தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயுத பூஜையை ஒட்டி ஏராளமான, பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர். இன்று விஜயதசமியையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பை எய்யும் விழா நடக்கிறது.