உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் பகுதி-20

விவேகானந்தர் பகுதி-20

மகாராஜாவிடம் இவர் சிக்கி சின்னாபின்னமாகப் போவது உறுதி என்று அங்கிருந்த எல்லாருமே முடிவு கட்டிவிட்டனர். சிலருக்கு வியர்த்தது. மகாராஜாவின் மீது அனைவர் பார்வையும் இருந்தது. அசராத விவேகானந்தர், என்ன திவான்! நான் சொன்னது தங்களுக்கு கேட்கவில்லையா? இதன் மீது உமிழுங்கள், என்றார். திவான் பதிலேதும் பேசாமல் மிரண்டு நிற்கவே, சுற்றி நின்றவர்களிடம், வாருங்கள், உங்களில் யார் வேண்டுமானாலும் இதில் உமிழலாம். இது என்ன? வெறும் காகிதம் தானே! இந்த காகிதத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தின் மீது துப்புவதற்கு என்ன தயக்கம்? என்றார் மீண்டும். அனைவரும் கப்சிப் என நின்றனர். மகாராஜா சுவாமியை சிறையில் தள்ளுவாரா அல்லது கொன்றே போடுவாரா என்று சிலர் கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர். விடாப்பிடியாக, சுவாமிஜி மூன்றாம் முறையாகவும் திவானிடம் சென்றார். என்ன திவான்! நான் சொல்வதை யாருமே கேட்கவில்லையே! கடைசியாகக் கேட்கிறேன். இதன் மீது துப்பப் போகிறீர்களா இல்லையா? திவான் இப்போது தான் வாய் திறந்தார்.

சுவாமிஜி! இதன் மீது எப்படி துப்ப முடியும்? இது மகாராஜாவின் உருவமல்லவா? என்றார். விவேகானந்தர் சிரித்தபடியே, இருக்கட்டுமே! இது நிஜமான மகாராஜா அல்லவே! வெறும் பிம்பம் தானே! மகாராஜாவின் நிஜ உடலையா இந்த கண்ணாடி சட்டத்திற்குள் வைத்திருக்கிறீர்கள்? அல்லது அவரது எலும்பு, சதை, ரத்தம் ஆகியவை இதில் இருக்கிறதா? என்றவர் மகாராஜாவை நோக்கினார். இவ்வளவு நடந்தும் மகாராஜா அமைதியாகவே இருந்தது தான் எல்லாருக்கும் பிடிபடாத விஷயமாக இருந்தது. அரசர் பெருமானே! இந்த கண்ணாடி சட்டத்திற்குள் நீங்கள் இல்லை. ஆனாலும், இங்கிருப்பவர்கள் அதிலுள்ள உங்கள் ஓவியத்தைப் பார்த்து நீங்களாகவே அதனைக் கருதுகிறார்கள். அதனால், உங்களிடம் எந்தளவுக்கு பணிந்து நடக்கிறார்களோ, அதே அளவுக்கு மரியாதையை இந்த ஓவியத்துக்கும் தருகிறார்கள். இதே போல் தான் சிலை வழிபாடும். உங்கள் ஓவியத்தை எப்படி நீங்களாகவே, மக்கள் பார்க்கிறார்களோ, அதே போல கடவுள்களின் சிலைகளையும் நிஜக் கடவுள்களாகவே பார்க்கின்றனர் மக்கள். அந்த சிலைகள் அவர்களுடைய மனதில் கடவுளைக் குறித்த தத்துவங்களையும், கடவுளின் குணங்களையும் மனதிற்குள் எளிதாகக் கொண்டு வருகின்றன.

விக்ரகத்தை கல்லில் படைத்தால் என்ன? தங்கத்தில் படைத்தால் என்ன? அதைப் பார்க்கும் மக்கள், ஏ கல்லே, எனக்கு அருள் தா, ஏ தங்கமே, எனக்கு இரக்கம் செய்,என்றா சொல்கிறார்கள். அது எந்த தெய்வத்தின் வடிவமோ, அதே பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். எனவே கடவுள் ஒன்றுதான். அதை அவரவர் விருப்பப்படி ஏதோ ஒரு உருவம் கொடுத்து பார்க்கிறார்கள். இதுதான் மகாராஜா உண்மை, என்றார். மகாராஜா சுவாமிஜியின் உறுதியான, நியாயமான பேச்சைக் கேட்டு அசந்து விட்டார். அவரையும் அறியாமல் சுவாமிஜியை கைகுவித்து வணங்கினார். பாபாஜி! (விவேகானந்தரை இப்படித்தான் அழைப்பார்கள் மக்கள்) இத்தனை நாளும் அறியாமையின் காரணமாகவோ அல்லது நான் மன்னன் என்ற ஆணவத்தினாலோ விக்ரக ஆராதனையைப் பழித்து வந்தேன். இப்போது உண்மையை உணர்கிறேன். இவ்வளவு நாளும் இறைவழிபாட்டை பழித்து வந்த எனக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அதிலிருந்து தப்புவதற்கு பரிகாரம் ஏதும் இருக்கிறதா? என உண்மையிலேயே பயந்து போய் கேட்டார். மகாராஜா! கடவுளே அனைத்துக்கும் சூததிரதாரி. இந்த எண்ணங்களை மனதில் உருவாக்கி அதன் மூலம் தன் சிறப்பை வெளிக்காட்ட அவர் எண்ணியிருக்கலாம். எனவே, யாரைப் பழித்தீர்களோ அவரே இதற்கு கருணை காட்ட முடியும்.

கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்களுக்கு அருள் செய்வார், என்று சொல்லிவிட்டு, விடை பெற்றார். ஆல்வாரிலுள்ள முதியவர் ஒருவர் சுவாமிஜியை அடிக்கடி பார்க்க வருவார். அவர் சுவாமிஜியிடம் கிளிப்பிள்ளையைப் போல, சுவாமி! நான் கடவுளின் அருளை உடனே பெற்றாக வேண்டும், அதாவது, நான் எதைக் கேட்கிறேனோ அதை உடனே அவர் தந்து விட வேண்டும். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள், என்றார். விவேகானந்தர் அவரிடம், கேட்டவுடன் கிடைக்க வேண்டுமானால், சில நியமங்களை (விதிமுறை) அனுஷ்டிக்க வேண்டும், எனச்சொல்லி அந்த விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த நபரோ விதாண்டாவாதமாகப் பேசினார். சுவாமி! கடவுள் கேட்டதைத் தருபவர், கேட்டதும் கொடுப்பவர் என்றுதான் ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். அந்த விதியின் கீழ் இப்போதே அவரது அருள் எனக்கு வேண்டும், என்றார். கடவுளை அடைவதற்குரிய சாதனைகளான பிரார்த்தனை, ஜபம் போன்றவற்றை கடைபிடிக்காதவர்களால் இறைவனை அடைய முடியாது. அதற்கு கடும் முயற்சி வேண்டும், என சொல்லியும் அவர் கேட்காமல் தொடர்ந்து துன்பம் செய்து வந்தார் முதியவர். எனவே, அவர் தன்னைக் காண வந்தாலே, சுவாமிஜி அவரை ஒதுக்கி விடுவார். ஒருமுறை அவர் சுவாமிஜியிடம் இதே கேள்வியைத் திருப்பிக் கேட்டார். சுவாமிஜி பதிலே சொல்லவில்லை.

ஒன்றரை மணிநேரமாக முதியவரும் விடாமல் கேட்டார். அன்று சுவாமிஜி மற்றவர்களையும் பார்க்கவில்லை. ஏன் இப்படி இருக்கிறார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கத்தி தீர்த்த முதியவர் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பி விட்டார். அவர் வெளியேறியதும் சுவாமிஜி அங்கே கூடியிருந்தவர்களிடம், முயற்சி இல்லாமலே எதையும் அடைந்து விட வேண்டும் என்று நம்மவர்களில் சிலர் நினைக்கிறார்கள். ஒரு வித முயற்சியும் செய்யாதவனிடம் கடவுள் இரக்கம் கொள்ளவே மாட்டார். பலமுள்ளவராகவும், ஆண்மையுள்ளராகவும் நீங்கள் இருங்கள். இங்கே வந்து என்னை தொந்தரவு செய்தவர், வாழ்நாளின் பெரும்பகுதியை புலன் இன்பத்திற்காக செலவழித்து விட்டார். இனி இவரால் ஆன்மிக பலத்தையும் அடைய முடியாது, உலகத்திற்கு நன்மையும் செய்ய முடியாது. இப்படி எந்தக் கடமையுமே செய்யாத இவருக்கு ஆண்டவனின் அருள் கேட்டவுடன் எப்படி கிடைக்கும்? ஆண்மையும், பலமும் உள்ளவன் தீயவனாக இருந்தால் கூட அவனுக்கு மரியாதை கொடுப்பேன். ஏனெனில், என்றேனும் ஒருநாள் அவன் அந்த பலமே அவனை ஒருநாள் நன்மையின் பக்கம் திருப்பி விட்டுவிடும். அவன் சத்தியத்தின் பக்கம் அழைத்துச் செல்லும், என உபதேசித்தார். இப்படி ஆல்வாரில் தனது கடமையை முடித்த சுவாமிஜி வேறு நகரத்துக்கு செல்ல முடிவெடுத்தார். ஆல்வாரிலுள்ள அவரது பக்தர்கள் கண்ணீர் வடித்தனர். சுவாமிஜியும் அவர்களின் உருக்கம் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும், அந்த தேசாந்திரியால் ஒரே இடத்தில் எப்படி இருக்க முடியும்? ஆல்வார் பக்தர்கள் அவரிடம், சுவாமிஜி! நாங்கள் உங்களுடன் வர எங்களை அனுமதிக்க மாட்டீர்கள். எனவே, உங்களுடன் ஐம்பது மைல் வரையாவது உடன்வர அனுமதிக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !