உத்திரமேரூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் விமரிசை
உத்திரமேரூர்: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட சிவன் கோவில்களில் நேற்று, அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது.உத்திரமேரூர் இரட்டைதாளீஸ்வரர், கைலாசநாதர், கருவேப்பம்பூண்டி காசி விஸ்வநாதர், சாலவாக்கம் ஆனந்தவல்லி சமேத சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட பல கோவில்களில், மூலவர் சிவபெருமானுக்கு அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. லிங்கத்தில் இருந்து சாதம் எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், கேசவஈஸ்வரர், செவிலிமேடு கைலாசநாதர் கோவில், களக்காட்டூர் அக்னீஸ்வர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.செங்கல்பட்டு, வ.உ.சி. தெரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் விசேஷமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.