கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? காரணம்பேட்டையில் பரபரப்பு
பல்லடம்: காரணம்பேட்டையில், கோவில் நிலம் ஆக்கிரமிக்கபடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணம்பேட்டையில், கிராம மக்களின் குல தெய்வமாக விளங்கும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள, கோவை மாவட்டம், சூலூர் திருவேங்கடம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, கலெக்டர், வருவாய் துறை, மற்றும் அறநிலையத்துறைக்கு அப்பகுதியினர் புகார் அளித்தனர். நேற்று, கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பூர்வீக இடம் என்றும், எங்கள் மூதாதையர்கள்தான் வழிதடத்துக்காக நிலத்தை கொடுத்தார்கள் என, மற்றொரு தரப்பினர் வாதம் செய்தனர். இதையடுத்து, தாசில்தார் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. கோவில் இடப் பிரச்சினை தொடர்பான இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.