பன்றியின் பின் சென்ற மகான்
ஆந்திராவைச் சேர்ந்த நாராயணதீர்த்தர், தன் நோய் தீர வேண்டி தலயாத்திரை புறப்பட்டார். தஞ்சாவூர் வந்தபோது, வெள்ளை பன்றி ஒன்று இவர் முன்னால் சென்றது. அதை தீர்த்தர் பின்தொடர்ந்தார். பூபதிராஜபுரம் வெங்டேசப் பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது, உன்னை அழைத்து வந்தது நான் தான் என்று வானில் அசரீரி ஒலித்தது. பெருமாளே வராகமாக தன்னை அழைத்து வந்தது குறித்து அவர் பெருமைப்பட்டார். பன்றியாக பெருமாள் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு வராகபுரி என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது வரகூர் எனப்படுகிறது. அங்கே தங்கிய நாராயணதீர்த்தர் நோய் நீங்கி குணமடைந்தார். பாகவதத்தில் உள்ள கிருஷ்ணரின் வரலாற்றை, கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற பெயரில் பாடினார். இது கேட்ட பெருமாள் சலங்கை ஒலிக்க ஆடினார். ஆஞ்சநேயர் தாளம் போட்டார். இக்கோயில் அர்த்தமண்டபத்தில் தாளம்கொட்டி ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 25கி.மீ., தூரத்தில் வரகூர் உள்ளது.