அறநிலையத்துறை வழக்குகள் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமனம்
திருப்பூர்: இந்து அறநிலையத்துறை வழக்குகளை நடத்த உதவியாக, மாவட்டம் தோறும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் நிலம், குத்தகை நிலம், கோவிலுக்கு சொந்தமான கட்டட வாடகை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை, இந்து அறநிலையத்துறை எதிர்கொள்ள நேரிடுகிறது. அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று, பேனல் வழக்கறிஞர்களை நியமிக்க, இந்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, வழக்கு நடத்தவும், தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நியமிக்கப்பட்ட, பேனல் வழக்கறிஞர் பட்டியல், மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். வழக்கு நடத்தும் கட்டணத்தை, இணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனர்கள், காலதாமதம் செய்யாமல் பெற்று வழங்க வேண்டுமென, கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் நடக்கும் வழக்குகளில் ஆஜராகி வாதாடவும், வழக்கு நடத்தவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும், பேனல் வழக்கறிஞர் பட்டியலை, கமிஷனரகம் வெளியிட்டுள்ளது.மாவட்டத்துக்கு ஒரு வழக்கறிஞரும், பெரிய மாவட்டங்களில், இரண்டு பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் தொடர்பான வழக்குகளில், பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் மட்டும் ஆஜராக முடியும், என்றனர்.