உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் புதிய கொப்பரை,  கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு  பூஜை செய்யப்பட்டது.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் வரும், 19ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அனேகன், ஏகன், என்பதை விளக்கும் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  இந்நிலையில், கோவையை சேர்ந்த பக்தர் ஒருவர் நேர்த்தி கடனாக பஞ்ச லோகத்தில் செய்யப்பட்ட, இரண்டு புதிய கொப்பரையை நேற்று கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இவை ஐந்தே முக்கால் அடி உயரத்துடன், வெப்பத்தால் பாதிக்காத வகையில்,  மேல்பாகம், 1,000 மி.மீ. விட்டம்,  கீழ்பாகம், 700 மி.மீ. சுற்றளவு கொண்டவாறு, 130 கிலோ எடையில், கால் இன்ச் தடிமனுடன் பஞ்ச லோக தட்டில் செய்யப்பட்டுள்ளது.  கொப்பரை மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக மேல் பாகம் நான்கு வளையம், கீழ்பாகம் நான்கு வளையம் என பொருத்தப்பட்டுள்ளது. காவி நிற வண்ணம் பூசப்பட்டு, மேல் பாகத்தில் சிவ சிவ என வாசகம் எழுதப்பட்டு,  விபூதி பட்டையுடன் கூடிய லிங்கம் படமும்,  கீழ்பாகத்தில் தீப விளக்கு எரிவதுபோல் படத்துடன் மஹா தீபம் என எழுதப்பட்டுள்ளது. இரண்டு கொப்பரையும் பூஜை செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் கொண்டு வரப்பட்டது. வரும், 18ல்,  கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வரும், 19ல், மஹா தீபம் ஏற்றப்படும். மஹா தீபம், தொடர் மழையிலும், 11 நாட்கள் தொடர்ந்து  எரியும். 40 கி.மீ., துாரம் வரை தெரியும். மஹா தீபம் முடிந்தவுடன், இதில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம் ஆருத்ரா தரிசனத்தில் முதலில் நடராஜருக்கு சாத்தப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !