கோயில்களுக்கு சொந்தமான 9,100 ஏக்கர் நிலங்கள் அளவீடு
சென்னை : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 9100 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன உபகரணங்களை பயன்படுத்தி அளவிடும் பணியை செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பத்துடன் 200 நில அளவையர்களை கொண்டும் நிலங்கள் அளவீடு செய்யப்படுகின்றன. இதுவரை கோயில்களுக்கு சொந்தமான 9100 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எச்.ஆர்.சி.இ. என்ற பெயருள்ள கல் நடப்பட்டுள்ளது. தற்போது அளவீடு செய்த நிலங்களை சுற்றி முள் வேலி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. தொடர் மழை காரணமாக அளவிடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தவுடன் இப்பணி தொடரும். விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சுவாதீனம் பெறப்படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.