பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்
பரமக்குடி: பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பரமக்குடி தரைப் பாலம் அருகில் உள்ள இக்கோயிலில் கந்த சஷ்டி விழா உற்சவர் மற்றும் மூலவருக்கு காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை சுவாமி பல்வேறு அவதாரங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, சூரனை வதம் செய்யும் லீலை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலித்தார். சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பாரதி நகர் முருகன் கோயிலில் மாலை நேரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.