உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண தடை குழந்தை வரத்திற்கு இடர் தவிர்த்த சுந்தரராஜ பெருமாள்

திருமண தடை குழந்தை வரத்திற்கு இடர் தவிர்த்த சுந்தரராஜ பெருமாள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் அருகே 9ஆம் நுாற்றாண்டை சேர்ந்த புகழ்வாய்ந்த இடர் தவிர்த்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர் ஆட்சியில் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்களின் குறை தீர்த்து வந்த நிலையில் கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்பட்டது. 30 வருடங்களுக்கு முன் ராஜபாளையத்தை சேர்ந்த மாதவன் ஐயங்கார் குடும்பத்தினர் மதில்சுவர் தாயார் விமானம், பெருமாள் சன்னதி, உள்ளிட்டவற்றை தொடர் புனரமைப்பு செய்து பொதுமக்களுக்காக வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

பல நுாற்றாண்டு கடந்த இக்கோயில் மூலவராக இடர் தவிர்த்த சுந்தரராஜ பெருமாள் மற்றும் சுந்தர வள்ளி சவுந்தரவல்லி தாயார் அருள் புரிகின்றனர். இத்துடன் காரிய சித்தி ஆஞ்சநேயர் மக்களின் குறை தீர்த்து வருகிறார். ஆரம்ப காலத்தில் ராமானுஜரின் நேரடி சீடரான எங்களாழ்வான் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து உள்ளதுடன் அவரது பெயரால் படித்துறையும் அமைந்துள்ளது. இதுதவிர கோயிலில் கோசாலை, நந்தவனம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலில் அமைந்துள்ள கிணற்றில் கையால் இறைக்கப்பட்ட நீரால் மட்டுமே தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதற்கான தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கோயிலில் விசேஷமாக உரிக்காத மட்டையுடன் கூடிய தேங்காய் கொண்டு வந்து ஆஞ்சநேயர் பாதத்தில் அர்ச்சனை செய்து 9 வாரம் கடந்து 10 வயது வாரம் வடைமாலை சார்த்தி வழிபட்டால் திருமண தடை, புத்திர பாக்கிய இடர் நீங்கும் என்பது இப்பகுதி ஐதீகம். கோயிலில் திருவிழா காலங்கள் என ஆடி, ஆவணி உத்திராடம் ஹோமம், அனுமன் ஜெயந்தி எண்ணெய் காப்பு, புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவரை மூலஸ்தானத்தில் வைத்து கருவறை அருகே பக்தர்களுக்கு சேவைக்கான அனுமதி, தாயாருக்கு பங்குனி உத்திரம் திருமஞ்சன அலங்காரம், ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் அவதார திருநாட்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆடிப்பூர முதல் நாள் வேத விற்பன்னர்கள் மூலம் சதஸ் நிகழ்ச்சி, மட்டை தேங்காய் மூலம் வேண்டுதல் என் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர் வருடம் முழுவதும் இரண்டு வேளை பூஜைகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !