மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னிமலை: முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம், பக்தி கோஷம் முழங்க நடந்தது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா தேரோட்டம், நேற்று காலை, உற்சவ அம்மை அழைப்புடன் தொடங்கியது. 8:10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து பக்தர்கள், பொங்கல் வைத்து ஆடு கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 3:30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷமிட்டு அம்மனை வழிபட்டனர். மாலை, 5:20 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவில் மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன், 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து, சுற்று பகுதியிலுள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.