சபரிமலையில் மண்டல கால பூஜை: நவ., 15ல் நடை திறப்பு
சபரிமலை: மண்ட கால பூஜைகளுக்காக சபரிமலை நடை, நாளை மறுநாள் மாலை திறக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜை நடப்பது வழக்கம்.தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்த்திகை ஒன்றாம் தேதி வருகிறது. இதனால் நவம்பர் 15 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16 அதிகாலை புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கும்.
இந்த சீசனில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக அனுமதிக்கப் படுகின்றனர். இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் மற்றும் ஆதார் ஒரிஜினல் கார்டுடன் பக்தர்கள் வர வேண்டும்.பம்பை கணபதி கோவில் அருகே கூப்பன் சரிபார்க்கப்பட்ட பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். சன்னிதானத்தில் இரவு தங்க அனுமதி இல்லை. பம்பையில் குளிக்கலாம். நீலிமலை அப்பாச்சி மேடு ரோட்டில் செல்ல முடியாது. நெய்யபிஷேகம் நேரடியாக செய்ய முடியாது. கவுன்டரில் கொடுத்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக நில்லக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.போட்டோ, ஆதார் கார்டுடன் சென்று, இங்கு பக்தர்கள் பதிவு செய்து சபரிமலை செல்லலாம்.
விமான நிலையத்துக்குஅனுமதி மறுப்பு: சபரிமலை அருகே எருமேலியில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக கேரள தொழில் வளர்ச்சிக் கழகம், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி மறுத்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.