திருவண்ணாமலையில் கரும்பு தொட்டில் சுமந்து தம்பதி நேர்த்திக்கடன்
ADDED :1423 days ago
திருவண்ணாமலை: குழந்தை வரம் பெற்ற தம்பதியர், நேர்த்திக்கடனாக, திருவண்ணாமலையில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து, மாடவீதி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு குழந்தைப்பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அவருக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக தலபுராணங்கள் கூறுகின்றன. இதனால், குழந்தைபேறு இல்லாத தம்பதியினர், அருணாசலேஸ்வரரை மனமுருகி வேண்டினால், குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, அருணாசலேஸ்வரரை வேண்டி, குழந்தைபேறு பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக நேற்று, குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து, மாடவீதியில் வலம் வந்து வழிபட்டனர்.