உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’கோவிலில் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கோர்ட் தலையிடாது’

’கோவிலில் தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கோர்ட் தலையிடாது’

புதுடில்லி:திருமலை ஏழுமலையான் கோவில் வழிபாட்டில் முறைகேடு நடப்பதாக கூறிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ’கோவிலில் தேங்காய் உடைப்பது, ஆரத்தி காட்டுவதில் எல்லாம் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக் கூறியது.

ஆந்திராவில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.அவற்றில் அபிஷேகம் சேவை உள்ளிட்ட சில வழிபாடுகள் ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக ஸ்ரீவாரி தாதா என்ற பக்தர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், ’சடங்குகள், வழிபாடுகளை நடத்துவது தேவஸ்தானத்தின் உரிமை. மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காதபோது நீதிமன்றம் அதில் தலையிட முடியாது’ என கூறி, அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அடுத்ததாக அவர் உச்ச நீதிமன்றத்தில் ’அப்பீல்’ மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே மனு விசாரணைக்கு வந்தபோது, தேவஸ்தானம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கலானது.அதில், ’கோவிலின் சேவைகள் மற்றும் உற்சவங்கள் புனித ராமானுஜாச்சாரியாரால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ’சடங்குகள் மிக நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும், சமய ஊழியர்கள் மற்றும் கோவில் பூஜாரிகளால் ஆகம விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:கோவிலில் பக்தர்களிடையே பாரபட்சம் காட்டுவது அல்லது நிர்வாக ரீதியிலான பிரச்னை போன்றவற்றில் வேண்டுமானால் நீதிமன்றம் தலையிடலாம்.மாறாக தினசரி வழிபாடுகள், அவற்றை நடத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. கடவுள் முன் தேங்காய் உடைப்பது எப்படி, ஆரத்தி நடத்துவது எப்படி என்பவை எல்லாம் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகள். இவை நீதிமன்றம் தலையிடக்கூடிய பிரச்னைகள் அல்ல. நிர்வாக பிரச்னைகள் தொடர்பாக மனுதாரருக்கு விளக்கம் தேவைப்பட்டால், எட்டு வாரங்களுக்குள் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !