அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபதிருவிழா: பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹாரத தேரோட்டம் நடந்தது, இதில், தேர்போல் அலங்கரித்த வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபதிருவிழா கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வரும், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. வழக்கமாக, 7ம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள், மஹாரத ஓட்டம் மாடவீதியில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடனை செலுத்துவர். இதில், பெண்கள் மட்டுமே பராசக்தி அம்மன் தேரை வடம் பிடித்து இழுப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால், மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் ரத்தானது. இந்நிலையில் நேற்று தேர்போல் அலங்கரித்த வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில், டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. இதையொட்டி, அதிகாலை பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி தரிசனத்துக்கு குறைவான அளவிற்கே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.