சபரிமலையில் ஹலால் சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள ஐகோர்ட்
சபரிமலை : சபரிமலையில் பயன்படுத்துவது ஹலால் சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் மாநில அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான அரவணை பாயாசம் தயாரிக்க சர்க்கரை சப்ளை செய்யும் உரிமை டெண்டர் மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்துதான் சர்க்கரை வருகிறது. சில நாட்களாக பம்பை குடோனில் இருந்து வரும் சர்க்கரை சாக்குகளில் ஹலால் என்ற முத்திரை உள்ளது; இது தொடர்பான வீடியாக்களும் வெளியானது. இந்நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீசில் கொடுத்த புகாரில், அரவணை தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஹலால் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சபரிமலை கர்ம சமிதி ஒருங்கிணைப்பாளர் குமார், கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அப்பம், அரவணை தயாரிக்க ஹலால் முத்திரை உள்ள சர்க்கரையை பயன்படுத்த தடை விதிக்கும் படி கோரியுள்ளார்.
இதில் ஆஜாராகி விளக்கமளித்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழக்கறிஞர், 2019ல் வாங்கிய சர்க்கரையில் சில பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது என்றும், இது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டடு தவறுதலாக வந்து விட்டது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.