கார்த்திகை தீபம் கோவில்களில் சிறப்பு பூஜை
பெ.நா.பாளையம்: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், கொங்காளம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.