மருதமலையில் கார்த்திகை தீபம் கோலாகலம்
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவ மூர்த்தியான, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்க கவச வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 6:40 மணிக்கு, தீப கம்பத்தில், மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன்பின், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தீபத்தையொட்டி, ஏராளமான பொதுமக்கள், சுவாமியை தரிசித்தனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பட்டீஸ்வரர் சுவாமி, பச்சைநாயகி அம்மன், உற்சவர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கு, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை முடிந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்து, தீப கம்பத்தின் கீழே யாக வேள்வி நடந்தது. அதனைத் தொடர்ந்து, மாலை, 6:50 மணிக்கு, தீப கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு கோடி தீபம் காட்டப்பட்டது. பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில், கோவில் வளாகத்தில் உள்ள தீபகம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.