உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க வசதி: நெய் அபிஷேகமும் செய்யலாம்

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க வசதி: நெய் அபிஷேகமும் செய்யலாம்

சபரிமலை: சன்னிதானத்தில் பக்தர்களை எட்டு மணி நேரம் தங்க வைப்பது, நெய் அபிஷேகத்துக்கு நெய் கொண்டு செல்ல பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்ட விஷயங்களில் தேவசம்போர்டு தீவிர பரிசீலனை செய்துவருகிறது.

ஏற்கனவே கொரோனா பாதித்த பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததால் சீசன் தொடக்கம் முதல் செங்குத்தான நீலிமலை பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சுவாமி ஐயப்பன் ரோடு வழியாக சென்று வருகின்றனர். இந்த ரோட்டில்தான் டிராக்டர்களும் இயக்கப்படுவதால் சிரமங்கள் உள்ளன. மேலும் அப்பாச்சிமேட்டில் மாவு உருண்டை எறிதல், சபரி பீடத்தில் வெடிவழிபாடு நடத்துதல், சரங்குத்தியில் சரக்கோல் ஊன்றுதல் போன்ற பாரம்பரிய சடங்குகள் நீலிமலை பாதையில் உள்ளதால் பக்தர்களுக்கு இது ஒரு குறையாக இருந்தது.

இதனால் இந்த பாதை வழியாக ஓரிரு நாட்களில் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு நீலிமலை மற்றும் அப்பாச்சிமேட்டில் இதய நோய் மருத்துவமனை கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டது.இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைப்பதை தேவசம்போர்டு உறுதி செய்யும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நீலிமலை பாதையில் செல்ல வசதி செய்து முடிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக பட்சம் எட்டு மணி நேரம் சன்னிதானத்தில் தங்கவும், அவர்களே நெய் அபிேஷகத்துக்கு நெய் கொண்டு செல்லவும் வசதி செய்வது தேவசம்போர்டின் முக்கிய பரிசீலனையில் உள்ளது. விர்ச்சுவல் கியூவில் இதுவரை 19 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கான வசதிகள் செய்ய தேவசம்போர்டு தயாராக உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் சபரிமலை கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேரள அரசை வலியுறுத்தி உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !