சபரிமலை அபிவிருத்தி திட்டங்களுக்கு பணம் திரட்ட தேவசம்போர்டு தீவிரம்
சபரிமலை : சபரிமலை அபிவிருத்தி திட்டங்களுக்காக தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பணம் திரட்டுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர்டு தலைவராக வாசு இருந்த போது அண்டை மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், பக்தர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்யும் வசதி உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பல அமைப்புகளும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் தரிசனத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நன்கொடைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. சன்னிதானம், பம்பையில் கட்டடங்களை நவீனப்படுத்துதல், சன்னிதானத்தில் சோலார் பிளான்ட், 18 படிகளுக்கு மேல் எலக்ட்ரானிக் கூரை அமைத்தல் போன்றவற்றுக்கு தமிழகம், தெலுங்கானாவில் இருந்து நன்கொடை உறுதி செய்யப்பட்டிருந்தது. இவற்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக புதிய தலைவர் அனந்தகோபன் கூறினார்.