திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மழைநீர்: பக்தர்கள் அவதி
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் சராசரியாக 73.66 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடி தாலுகாவில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த தாலுகாவில் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கோயில் வடிகால் வழியாக மழை நீர் உட்புகுந்தது. இப்பகுதியில் உள்ள சாலையில் மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குளம் நிரம்பியதால் தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளது. இதனால் இக்கோவிலில் நடைபெறும் ஆயுள் ஹோமம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய திருமணங்களில் கலந்து கொள்வதற்காக வந்த தம்பதியினர், அவர்களது உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் இரண்டு ராட்சச மின் மோட்டார்கள் மூலம் மழை வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.