திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மலை உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை கீழே இறக்கி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்த நிலையில், நேற்று மாலையுடன் மஹா தீபம் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை மஹா தீப கொப்பரை மலை உச்சியிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், வரும், 20ல், ஆருத்ரா தரிசனத்தன்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதில், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட், 10 ரூபாய் விலையில் வழங்கப்படும்.