மணக்குள விநாயகர் கோவிலில் இன்று முதல் அர்ச்சனை
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, இன்று முதல் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இதனால் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு பூஜை, அர்ச்சனை நடைபெறவில்லை. ஆகம விதிகளின்படி ஆறுகால பூஜைகள் பக்தர்கள் இன்றி நடந்தது.இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விநாயகருக்கு அர்ச்சனை சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, நேற்று கணபதி ஹோமத்துடன், மணக்குள விநாயகருக்கு சிறப்பு பூஜை துவங்கியது. இன்று முதல் அனைத்து அர்ச்சனைகளும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.