ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பர வீதிவுலாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வருடந்தோறும் மார்கழி அஷ்டமி அன்று சிவபெருமான் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலையில் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள்,பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் சோமநாதர் பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்மனும் ரிஷப வாகனங்களில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தனித்தனி சப்பரத்திற்கு எழுந்தருளினர். சப்பரங்களுக்கு முன்பாக விநாயகரும் பின்புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன் சென்றனர். சப்பரங்கள் பாகவத் அக்ஹாரரம்,மெயின் ரோடு, நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஏராளமானோர் சப்பரங்களுக்கு முன்பும் பின்பும் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விதமாக அரிசி, நெற்கதிர்கள், நவதானியங்களை தூவியயபடி சென்றனர். சப்பரங்கள் கோயிலை வந்தடைந்தவுடன் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.சப்பரங்களை கீழமேல்குடி, கால்பிரபு மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.