பழநி மலைக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பழநி: தமிழக அரசின் கோரோனா கட்டுப்பாட்டு நடைமுறையால் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் நேற்று (ஜன.10) தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் லட்சக்கணக்கானோர் பழநி மலைக் கோயிலில் தரிசனம் செய்தனர்.
பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் ஆங்காங்கே தங்கினர். மேலும் திங்கட்கிழமையான நேற்று (ஜன.10) பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இதனால் பழநி மலைக்கோயிலில் அதிக அளவில் கூட்டம் நிரம்பியிருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.