காணும் பொங்கல் அன்று ஊரடங்கு வெறிச்சோடிய செஞ்சிக்கோட்டை
செஞ்சி: காணும் பொங்களுக்கு ஒரு லட்சம் பேர் குவியும் செஞ்சி கோட்டை வளாகம் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான செஞ்சி கோட்டையை காண காணும் பொங்கல் அன்று விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஊரடங்கு காரணமாக செஞ்சிக்கோட்டையில் சுற்றுலா பயணிகளை யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கும் இருந்ததால் செஞ்சி நகரமும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காணும் பொங்கலுக்கு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக தின்பண்ட கடைகள், தற்காலிக ஓட்டல்கள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என நூற்றுக்கணக்கான சாலையோர கடைகள் இருக்கும். ஊரடங்கினால் இந்த சிறுவியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.