கோயில் வளாகத்தில் பயனற்ற கழிப்பறை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தல்
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் பயன்பாடு இல்லாத பொது கழிப்பறையை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயில் வடக்கு வாசல் ஒட்டிய இடத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு பொது கழிப்பறை கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி வைகுண்ட ஏகாதசி நாளில் கதலி நரசிங்கப்பெருமாள் வடக்கு வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கழிப்பறை கட்டும் போதே வடக்கு வாசல் ஒட்டிய பகுதியில் கட்டுவதற்கு பக்தர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அவசரகதியில் கட்டி முடித்தனர். தொடர்ந்து கழிப்பறையை யாரும் பயன்படுத்தவில்லை. இதனால் பராமரிப்பின்றி பல மாதங்களாக மூடிக்கிடக்கிறது. கோயில் வெளி பிரகாரத்தை வலம் வரும் பக்தர்கள் கழிவறையும் சேர்த்து சுற்றிவர வேண்டியுள்ளது. பலருக்கும் இடையூறாக உள்ள பயனில்லாத கழிப்பறையை அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊராட்சி நிர்வாகம், ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.