உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் கோயிலில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா

திருக்கடையூர் கோயிலில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா

மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாறுப்படி நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஷ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னரிடம், அமாவாசையை பௌர்ணமி தினம் என்று தவறுதலாக அபிராமிபட்டர் கூறினார். இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறியதை அடுத்து  அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான

“விழிக்கே அருள் உண்டு அபிராம
வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார். அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக கோயில் வரலாறு கூறுகின்றது. அதன்படி தை அமாவாசை இரவு  அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாக பாடினர். ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !