விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: 20 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில், தருமபுரம் 27வது ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், ஆறாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 7:30 மணியளவில், யாகசாலையில் இருந்து புனித நீருடன் கடம் புறப்பாடு நடந்தது.தமிழில் மந்திரங்கள்காலை 8:01 மணியளவில், விருத்தகிரீஸ்வரர் மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஐந்து கோபுரங்கள், பஞ்சமூர்த்திகள் விமான கலசங்கள், பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.காலை 8:25 மணியளவில், ஹெலிகாப்டரில் இருந்து கோபுரங்கள், விமான கலசங்கள் மீது பூக்கள் துாவப்பட்டன.கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கோட்டை மதில் சுவர்கள், உள்பிரகார சுவர்களில் இருந்து மின் மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட ஸ்பிரேயர் வாயிலாக கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தெய்வத் தமிழ்ப் பேரவை முறையீட்டின்படி, 1,000 ஆண்டுகளுக்குப் பின், கோபுர கலசங்களில் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்பட்டு, தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன.தமிழக அமைச்சர்கள் கணேசன், சிவசங்கர், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.20 சவரன் திருட்டுவிழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர், ஆறு பெண்களிடம் 20 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.