திருவந்திபுரம் கோவிலில் அலைமோதிய கூட்டம்
கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நேற்று நடந்ததால் கூட்டம் அலைமோதியது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் உள்ளேயும், ஹயக்கிரீவர் மலையில் உள்ள மண்டபத்திலும் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், முகூர்த்த நாளான நேற்று, கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், சுற்றியுள்ள மண்டபங்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணங்களில் பங்கேற்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிகாலை முதலே திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.பொதுமக்கள் முகக் கவசம் அணியாலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பங்கேற்றனர். இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களையும், முகக் கவசம் அணியாதவர்களையும் எச்சரித்தனர்.