உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சொத்துக்களில் வாடகை பாக்கி ரூ.2,390 கோடி: அறநிலையத்துறை

கோவில் சொத்துக்களில் வாடகை பாக்கி ரூ.2,390 கோடி: அறநிலையத்துறை

சென்னை : கோவில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கி, 2,390 கோடி ரூபாயில், மூன்றில் ஒரு பங்கு வசூலித்திருந்தால், 1,000 கோவில்களை சீரமைக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்களில் இருந்து, வாடகை பாக்கி வசூலிக்க உத்தரவிட்டிருந்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அவமதிப்பு வழக்கை, வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அளித்த அறிக்கையின்படி, 2021 அக்டோபர் வரை, 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது என்பதால், அதை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகி, அதிகாரி களின் ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார். இதையடுத்து நீதிபதிகள், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கை எங்கே? 2,390 கோடி ரூபாயில், மூன்றில் ஒரு பங்கு வசூலித்திருந்தால் கூட, 1,000 கோவில்களை சீரமைக்க முடியும் என்றனர். உடனே, அறநிலையத் துறை கமிஷனர், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, 99 ஆயிரம் சொத்துக்களில் இருந்து வருமானம் வருகிறது. ஆண்டுக்கு, 540 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தினசரி, 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாடகை பாக்கி அனைத்தும் வசூலிக்கப்படும். சொத்துக்கள், வாடகைதாரர்கள், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலை, விரைவில் இணையதளத்தில் வெளியிடுவோம் என்றார். இதையடுத்து, அறநிலையத் துறை எடுத்து உள்ள நடவடிக்கைக்கு, நீதிபதிகள் பாராட்டு தெரிவித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !