விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் கோலாகலம்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஆழத்து விநாயகர்,வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தம்பாள், சண்டிகேஸ்வரர், சாமிகள் ஐந்து பிரம்மாண்ட தேர்களில் மாட வீதியை வலம் வந்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக ஆறாம் நாள் உற்சவத்தில் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அதிகாலை 5:00 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேரடியில் எழுந்தருளியதும் சிறப்பு தேர்க்கால் பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங், கயிலை வாத்தியங்களுடன் ஆழத்து விநாயகர் தேர் காலை 6:02 மணிக்கு புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு தேரோடும் வீதிகளில் இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து சண்முக சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வீதியுலா வந்தன.