இலவச தரிசன டிக்கெட் திருப்பதியில் துவக்கம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசன டிக்கெட் வழங்குவதை தேவஸ்தானம் துவங்கியது. திருமலை ஏழுமலையான் கோவிலில், கொரோனா பரவலின் காரணமாக, இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்படுவது பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட், ஆன்லைன் வாயிலாக தரப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் நாடு முழுதும் குறைந்து வருவதால், இலவச தரிசன டிக்கெட்டுகளை மீண்டும் திருப்பதியில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று காலை, 7:30 மணியில் இருந்து டிக்கெட் வழங்கப்பட்டது.இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள், இன்று காலை முதல், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதி அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜா ஸ்வாமி சத்திரம் ஆகிய இடங்களில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.