உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கு சேகண்டி சத்தத்தில் அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

சங்கு சேகண்டி சத்தத்தில் அரங்கநாதர் கோவில் தேரோட்டம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேர், தாசர்களின் சங்கு, சேகண்டி சத்தத்துக்கு இடையே வீதிகளில் உலா வந்தது.

கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம் அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளினார். மாலை, 3:30 மணிக்கு தேர் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக, 4:20 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சன்னை போடும் குழுவினர், பின்புற சக்கரத்தை சன்னைமரக் கட்டையால் தள்ளி விட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நிலையில் இருந்து புறப்பட்ட போது, அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாசர்கள், சங்கு ஊதியும், சேகண்டி அடித்தனர். இந்த சத்தத்தில் தேர் நான்கு ரத வீதிகள் வழியாக, உலா வந்தது. தேரில் இருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !