திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி பிரம்மோற்சவம் : 18 திருநடனத்துடன் நிறைவு
திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, பந்தம் பறி உற்சவம், 18 திருநடனம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
அதிகாலையே கோவிலில் கூடிய பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, ஆண்டு தோறும், 10 நாட்கள் நடக்கும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, இந்த ஆண்டு 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, சிம்மம், சர்பம், ரிஷபம், குதிரை, அஸ்தமானகிரி, இந்திர விமானம், பூதம், அதிகாரநந்தி, பூப்பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரேம்மோற்சவகத்தின் முக்கிய நிகழ்வான, சந்திரசேகரர் திருத்தேர் உற்சவம், 13 ம் தேதியும்; 15 ம் தேதி, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 63 நாயன்மார்கள் உற்சவம், மகிழடி சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் விமரிசையாக நடந்தது.பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, தியாகராஜர் பந்தம் பறி உற்சவம், 18 திருநடனம் கோலாகமாக நடைபெற்றது.முன்னதாக, பிரம்மாண்ட மலர் அலங்காரத்தில், தியாகராஜ சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். உடன், வடிவுடைய அம்மனும் வலம் வந்தார்.பின், சன்னதி தெருவில் உள்ள, பவனி பந்தலில், திருவிழா வரவு - செலவு கணக்கு படிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, கோவில் வளாகத்திற்கு ஊர்வலமாக வந்தார்.கோவில் வளாகத்தில், வசந்த தீர்த்த தொட்டியை சுற்றி, வடிவுடையம்மன் எதிர் சேவை புரிய, வாத்தியங்கள் முழங்க, துாப வாசனையுடன், ஒய்யார நடனம் புரிந்தபடி தியாகராஜ சுவாமி ஒன்பது முறை திருநடனம் புரிந்தார்.பின், வடிவுடையம்மன் சன்னதியில் இருந்து தெற்கு புறம் பார்த்தாற் போல் எழுந்தருள, தியாகராஜர் வடக்கு பார்த்தாற் போல், ஒன்பது முறை திருநடனம் புரிந்தார்.அப்போது, மல்லி, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பல வண்ண மலர்கள் துாவப்பட்டன. பின், தியாகராஜனர் சன்னதியில் நிலை அடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வுடன், மாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.