வைகை கரை அய்யனார், சோனையா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மானாமதுரை: மானாமதுரை வைகை கரை அய்யனார், அலங்காரகுளம் சோனையா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நல சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகை கரை அய்யனார்,சோனையா சுவாமி மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. அதனைத்தொடர்ந்து பஞ்சவர்ண பூஜை, தோரண பூஜை,மகா பூர்ணாஹுதி மற்றும் 2ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு காலை 9:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கொண்டு மேளதாளங்களுடன் கோயிலைச் சுற்றி வலம் வந்து கோபுர விமானங்களுக்கும், சுவாமிகளுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத்தொடர்ந்து புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டன. பின்னர் அய்யனார்,சோனையா மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,தீபாராதனைகள் நடைபெற்றன.கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாபிச இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நல சங்கத்தினர் செய்திருந்தனர்.