உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூணுால் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கண்டனம்

பூணுால் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கண்டனம்

பூணுால் அறுப்பு போராட்டம் தொடர்வோம் என, அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் அப்துல் ரஹீமுக்கு, தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணுால் அறுப்பு போராட்டம் தொடர்வோம் என, தெரிவித்துள்ளார். பள்ளிகளில் ஹிஜாப் அணிதல் விவகாரம் கர்நாடகாவில் நடந்தது; தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இல்லை.

இவ்விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாநில அரசு தொடர்புடைய விவகாரம். எந்த ஒரு சமூகத்துக்கும் தொடர்பில்லை.இதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத பிராமணர்களையும், ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த பூணுால் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என, கூறுவதை கண்டிக்கிறோம். பூணுால் என்பது ஹிந்து சமூகத்தில் பிராமணர்கள் மட்டுமின்றி, பல சமூகத்தினராலும் புனிதமாக போற்றப்படுவதாகும். புனிதமாய் போற்றப்படும் பூணுாலை அறுப்பது என்பது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், எங்கள் மத உரிமைகளையும் பாதிக்கும் செயலாகும். மேலும், இ.த.ச., பிரிவு 295 ஏ-ன் படி தண்டனைக்குரிய குற்றம்.

இத்தகைய அறிவிப்பு எங்கள் சமூகத்துக்கு மட்டுமின்றி பூணுால் அணியும் பிற சமூகத்தினர் இடையேயும் அச்சத்தையும், பீதியையும், பாதுகாப்பில்லாத உணர்வையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய அறிக்கை இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை துாண்டிவிடும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியிலும் உள்ளது. பிராமணர் சமூகம் எப்போதுமே சட்டத்தை மதித்து மத நல்லிணக்கம், பொது அமைதியை விரும்பி பேணி பாதுகாக்கும் சமூதாயம். ஆனால், இச்சமுதாயத்தை தாக்குவதையே சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அனைத்து சமுதாயங்களைப் போன்று, பிராமண சமுதாயத்தையும் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை மற்றும் பொறுப்பாகும்.பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை துாண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும், சங்கர மடத்துக்கும், பூணுால் அணிவோருக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !