உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பணியாளர்கள் இடமாறுதல் விதி திருத்தத்திற்கு எதிராக வழக்கு

கோயில் பணியாளர்கள் இடமாறுதல் விதி திருத்தத்திற்கு எதிராக வழக்கு

 மதுரை : கோயில் பணியாளர்களை இடமாறுதல் செய்ய அறநிலையத்துறை கமிஷனருக்கு அதிகாரம் வழங்கி விதியில் திருத்தம் செய்ததற்கு எதிராக தாக்கலான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழ்நாடு முதுநிலை தரக் கோயில் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சுதர்சனம் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை பணியாளர்களை இடமாறுதல் செய்ய கமிஷனருக்கு அதிகாரம் வழங்கி விதி திருத்தம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் அறநிலையத்துறை கமிஷனர் ஜன.,25 ல் வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.விதிகள்படி கோயில் பணியாளர்களை கட்டுப்படுத்துதல், இடமாறுதல் செய்யும் அதிகாரம் அறங்காவலர்களுக்கு உள்ளது. கமிஷனருக்கு அதிகாரம் அளித்து விதி திருத்தம் மேற்கொண்டது அறநிலையச் சட்டத்திற்கு முரணானது. விதி திருத்தம் , வழிகாட்டுதல்கள்படி மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சுதர்சனம் குறிப்பிட்டார். பிப்.,4 ல் நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: கோயில் வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு சிறப்பு அமர்வு 75 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. அதனடிப்படையில் கமிஷனருக்கு அதிகாரம் அளித்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அரசு 35 வழிகாட்டுதல்களை ஏற்றுள்ளது. 32 வழிகாட்டுதல்கள் தொடர்பாக விளக்கம் கோரி சிறப்பு அமர்வில் மனு செய்யப்பட்டுள்ளது. பிப்.,25 ல் சிறப்பு அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தது. நீதிபதிகள்: இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்விற்கு மாற்றப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !