குன்றத்து கோயிலில் 428வது ஆண்டாக நாடகம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெயில் உகந்த அம்மன் மாசி உற்ஸவ விழாவின் உச்ச நிகழ்ச்சியில் 428வது ஆண்டாக மதுரை வலையங்குளம் திருமலை மெச்சனார் ராஜாராம் குடும்பத்தினர் சார்பில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடந்தது. கோயிலில் உற்ஸவ விழா பிப். 15ல் துவங்கியது. நேற்று சட்டத்தேரில் அம்மன் எழுந்தருளி தேரோட்டம், பின்பு இரவு நாடகம் நடந்தது. சித்தனன் கூறியதாவது: எனக்கு 73வயதாகிறது. ஐந்தாவது தலைமுறையாக நாடகம் நடத்துகிறோம். எனது முதாதையர் திருப்பரங்குன்றம் கோயில்முன்பு மாசி உற்சவ விழா நாடகம் நடத்தியதைப் மன்னர் திருமலை நாயக்கர் பார்த்து பாராட்டி செப்பு பட்டையம் வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டுவரை தொடர்ந்து நாடகம் நடத்தி வருகிறோம். இந்த நாடகம் நடத்துவதற்காக எங்களுக்கு கோயிலில் இருந்து மாலை மரியாதை செய்வர். 64 உப்பில்லா கட்டிகளும், ரூ.101ம் வழங்குவர். 2 பங்காளிகள் உள்ளோம். ஒரு பங்காளி 12 ஆண்டுகள் நடத்துவோம். மற்றொரு பங்காளி அடுத்த 12 ஆண்டு நடத்துவோம். இந்த நாடகம் நடத்துவதற்கு ரூ. 20 ஆயிரம் செலவாகும். சொந்த செலவில் நடத்துகிறோம். கோயில் மரியாதைக்காகவும், நாடகக் கலை அழிந்து விடக்கூடாது, தமிழ் கலாச்சாரம், தொண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நாடகம் நடத்தி வருகிறோம். நானும் நாடகத்தில் நடிக்கிறேன். திருப்பரங்குன்றம், வலையங்குளம், சோளங்குருணி கோயில்களில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்துகிறோம். என்றார் .