உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்

சித்தூர்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆவது நாளான நேற்று காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு நகரில் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக விநாயகர் ,வள்ளி ,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, காளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார் மற்றும் இவர்களுக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் என  வரிசையாக நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனால் வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்தனர். சுவாமி ஊர்வலத்தின்போது மேளதாளங்கள் மந்திர மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டம் மற்றும் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து பகல் ஒரு மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரம் அருகில் சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு முக்கோடி தேவர்களை வரவேற்கும் வகையில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர் ,ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணிய சுவாமி ,ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் மற்றும் சண்டிகேஸ்வரரின் உற்சவ மூர்த்திகளை தங்க கொடி மரம் எதிரில் ( ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி அருகில்)5 திசைகளில் அமர்த்தினர்.இதனைத் தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சியை தொடங்கினர் முன்னதாக கொடியேற்றத்துக்கு தேவையான பூஜை பொருட்களை உபயதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ  குடும்பத்தார் ஆகியோர் கோயிலுக்குள் ஊர்வலமாக தலைமீது சுமந்து வந்து அர்ச்சகர்கள் இடம் வழங்கினர் .மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு முக்கோடி தேவர்களை வரவேற்பதற்காக இந்த உற்சவத்தை நடத்தப்படுவதாக வேத பண்டிதர்கள் தெரிவித்தனர் . மேலும் கோயில் வேத பண்டிதர்கள் ஆகம முறைப்படி கலசங்களை வைத்தும் சிறப்பு யாகம் வளர்த்தும் சிறப்பு பூஜைகள் நடத்தினர் . தொடர்ந்து பக்தர்களின் "ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா"என்ற சிவ  நாமஸ்மரனத்திற்கு இடையே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியை தங்க கொடி மரத்தில் கொடி வஸ்திரமுடன்  பெண் பக்தர்கள் கொடுத்த புடவைகளை ஏற்றினர். தொடர்ந்து தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்ததோடு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !