சதுரகிரியில் மகா சிவராத்திரி விழா: பிப். 28 முதல் பக்தர்களுக்கு அனுமதி
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், மஹாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டினை முன்னிட்டு பிப்.28 முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப் படுவது வழக்கம். இதன்படி தற்போது பிப்ரவரி 28 அன்று பிரதோஷம், மார்ச் 1 அன்று மகா சிவராத்திரி, மார்ச் 2 அன்று அமாவாசை என தொடர்ந்து மூன்று நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு பிப்ரவரி 28 அன்று காலை 7 மணி முதல் மார்ச் 3 வரை, தினமும் பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோவிலில் இரவு தங்குவதை தவிர்க்கவும், தற்போது வெயிலின் தாக்கம் துவங்கி உள்ளதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம், வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.