பிரான்மலை உச்சிக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் சிவராத்திரியையொட்டி மலை உச்சிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
இம்மலையில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். பாலமுருகன் தெய்வீகப் பேரவை மற்றும் ஐந்து ஊர் கிராமத்தார் சார்பில் பால்குட விழா நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி முன்னிலை வகித்தார். மலையடிவாரத்திலுள்ள திருக்கொடுங்குன்ற நாதர் கோயில் உற்சவ மண்டபத்தில் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உமாபதி சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை செய்தார். காலை 9:30 மணிக்கு பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் மலைப்பாதை வழியாக சென்று 2500 அடி உயர உச்சியை அடைந்து அங்கு பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.