உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி: குலதெய்வ கோவில்களில் குவிந்த பக்தர்கள்

மகா சிவராத்திரி: குலதெய்வ கோவில்களில் குவிந்த பக்தர்கள்

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் மகா சிவராத்திரி,மாசி களரி விழாவை முன்னிட்டு சிவாலயங்கள்,குலதெய்வ கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகா சிவராத்திரி விழா அன்று சிவாலயங்களில் இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல குலதெய்வ கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று காரணமாக மகா சிவராத்திரி விழா பெரும்பாலான கோயில்களில் நடைபெறாத நிலையில் இந்தாண்டு தமிழகத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று குலதெய்வ கோயில்களிலும் மாசி களரி விழாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து மானாமதுரை,இளையான்குடி பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும், குலதெய்வ கோயில்களிலும் சிவராத்திரி மற்றும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக வெளியூர்,வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களது குலதெய்வ கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதற்கு வந்துள்ளனர். மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளும் அன்னதானமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வருவதையடுத்து சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !