மகா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் பரவசம்
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், மகா சிவராத்திரி தினத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரண்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள, மலை தொடரின், 7வது மலை உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க, ஆண்டுக்கு, மார்ச் முதல் மே வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்குகிறது. இந்நிலையில், இத்தாண்டு, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏற, கடந்த, 2 நாட்களுக்கு முன், பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இந்நிலையில், மகா சிவராத்திரி தினமான நேற்று, வெள்ளியங்கிரி மலை ஏறி, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அடிவாரத்தில், வனத்துறையினர் அமைத்திருந்த சோதனைச்சாவடியில், பக்தர்களின் பைகளை சோதனை செய்து, தீப்பிடிக்கும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்களை எடுத்தபின், மலையேர அனுமதிக்கப்பட்டனர். 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வந்ததால், முள்ளாங்காடு சோதனைச்சாவடி முதல் பூண்டி கோவில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.