சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா
பல்லடம்: பல்லடம் அருகே, சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சப்த கன்னிமார் கோவில். இங்கு, பட்டராகி, தேவ கன்னிகா, பத்ம கன்னிகா, சிந்து கன்னிகா, அகஜா கன்னிகா, வன கன்னிகா, மற்றும் சுமதி கன்னிகா என, ஏழு சக்தியாக கன்னிமார் தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன. நேற்று, இக் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, மார்ச் 12 காலை 7.30 மணி முதல், திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, கோமாதா வழிபாடு உள்ளிட்டவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, முளைப்பாரி ஊர்வலம், சக்தி எழுந்தருள செய்தல், பேரொளி வழிபாடு, திருப்பள்ளி எழுச்சி, மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்தன. நேற்று காலை, 6.30 மணிக்கு மேல் கோபுர கலசங்ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிரவை ஆதீனம் அர்ச்சகர் சண்முகம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் கமிட்டி சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.